வாழ்க்கை கவிதை
துன்பங்கள் துரத்தியே வந்தாலும் வாழ்க்கையே வாழ்ந்து பார்ப்போமே
போட்டியில் போர்படை சூழ்ந்தாலும் களத்தில் இறங்கி நிற்போமே
தடைகள் தடுமாற்றம் தந்தாலும் காலடிகள் எடுத்துத்தான் வைப்போமே
மற்றவர்கள் முட்டாள் என்றாலும் முடிந்தவரை முயற்சிகள் செய்வோமே
தோல்விகள் தொடர்ந்து வந்தாலும் எதிர்நின்று வென்று பார்ப்போமே
சோதனைகள் சோதித்தே பார்த்தாலும் சோர்வற்று சாதனைகள் செய்வோமே
சூழ்ச்சிகள் சூழ்ந்தே வந்தாலும் ஞானமாய் தப்பித்து செல்வோமே
செல்வத்தால் செழித்து போனாலும் செருக்கற்ற செயல்கள் செய்வோமே
பொய்யர்கள் பொலிவாய் தூற்றினாலும் உண்மையை உரக்கவே உரைப்போமே
ஆதரவாய் அணைக்காமல் போனாலும் அன்பை அனைவருக்கும் பகிர்வோமே
நெஞ்சத்தில் வஞ்சம் வைத்தவனே தொலைவாக அகற்றியே வைப்போமே
துரோகத்தில் நட்பை கொன்றவனே மன்னிப்போம் மறக்கவே வேண்டாமே
நாடினால் நன்மைகள் செய்வாரை உள்ளத்தில் உயர்வாய் வைப்போமே
பாசத்தில் பாசாங்கு அற்றவரில் பண்பாய் பழகிக் கொள்வோமே
தீமைகள் அருகில் அழைத்தாலும் நன்மை நாம் அறிந்து கொள்வோமே
செயல்களை செய்யும் முன்னே நம்மை நாம் ஆராய்ந்து கொள்வோமே
-பிபி