பிச்சைக்காரன் கவிதை
பிச்சைக்காரனின் புலம்பல்
பட்டினி கிடந்து பாழாய் போகிறேன்
பசியால் வாடி மெலிந்தே போகிறேன்
ஊர் ஊராய் மாறி போகிறேன்
உறவினின்றி ஒற்றையாய் போகிறேன்
தூக்கமின்றி சுற்றித் திரிகிறேன்
துக்கங்களை சுமந்து திரிகிறேன்
வேலையின்றி வெறுமையாய் நிற்கிறேன்
வீடின்றி வாடியே நிற்கிறேன்
கையேந்தி பிச்சை கேட்கிறேன்
காண்பவரிடமெல்லாம் கேட்கிறேன்
காசின்றி அலைந்து திரிகிறேன்
கால் கடுக்க சுற்றித் திரிகிறேன்
வெயிலையும் தாங்கி கொள்கிறேன்
மழையையும் தழுவி கொள்கிறேன்
அணைப்பவரையும் ஏற்றுக் கொள்கிறேன்
அடிப்பதையும் வாங்கி கொள்கிறேன்
சாலையின் ஓரம் தங்கினேன்
சாக்கடை அருகிலும் தங்கினேன்
உண்பதை ஏக்கத்தில் பார்க்கிறேன்
உடைகளை வேடிக்கை பார்க்கிறேன்
எட்டிப் போகிறவரை பார்க்கிறேன்
ஏளனமாய் சிரிப்பவரையும் பார்க்கிறேன்
தன்னந்தனியே பேசினேன்
தன்னிலை மறந்தும் பேசினேன்
தலைமுடியை குறைக்க மறக்கிறேன்
தாடியையும் சிரைக்க மறக்கிறேன்
துர்நாற்றம் வீசியும் செல்கிறேன்
தூரம் நேரம் அறியாமலும் செல்கிறேன்
குளிரிலும் தூங்கி பழகினேன்
கொடுமைகளை தாங்கியும் பழகினேன்
நாயுடன் நட்பாய் பழகினேன்
உண்பதை பகிர்ந்தும் பழகினேன்
அமைதியாய் அமர்ந்தும் பழகினேன்
அடிக்கடி சிரித்தும் பழகினேன்
நோய் வந்தால் நொந்து சாகிறேன்
வேதனையில் வெந்து சாகிறேன்
படைத்தவனை எண்ணி சிரிக்கிறேன்
பழிப்பவனையும் நினைத்து சிரிக்கிறேன்
மரணத்தை வேண்டி அழைக்கிறேன்
மறு நொடியில் வரவே அழைக்கிறேன்.
-பிபி